Fourthpillar's Blog

உண்மை, நெறிபிறழாமை,நேர்மை போன்ற மை நிரப்பி, எழுதும் சாசனங்கள்!

  • Happenings…

  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 1 other subscriber

புராதனங்களை மதிக்காத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்

Posted by fourthpress on April 25, 2010

29.04.2011 சேர்க்கப்பட்ட செய்தி:

பாருங்கள் இந்த காகிதக் கத்தியை. உரியுங்கள் அறநிலையத்துறையினரின் தோலை.  Sand blastingஐத் தடுப்போம்.

——————————————————————————————–

புராதன சின்னங்களைப் பேணி காப்பதில் தமிழகத்தின் எல்லா கோவில்களிலுள்ள இந்து அறநிளையத்துறை அதிகாரிகளுக்காக, சிறப்பு பயிற்சி முகாம் மக்கள் வரிப்பணத்தில், மூன்று வேளை தடபுடல் விருந்தோடு சென்ற ஆண்டு, தமிழக தொல்லியல் துறை ஆணையாராக உள்ள திரு.ஸ்ரீதர் தலைமையில் அப்போதைய இந்துஅறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர் கலந்து கொள்ளும் வகையில், நடந்தேறியது. ஆனால் தற்போதைய ஆணையர் ஷேம் பத் (எண் கணித அதிர்ஷ்டத்தை நம்பும் அவர் அப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறார் – Shampath என்று- இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே) எல்லாவற்றையும் தூக்கிக் கிடப்பில் போடும் வகையில், பாரம்பரியச் சின்னங்களை ஒழித்துக்கட்டுவதில் மிக விரைவு சேவை செய்து வருகிறார்! நான் அவரிடம் சமீபத்தில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலின் எச்சங்கள், புராதன சின்னங்கள், கற்சிலைகள், தூண்கள் ஆகியவை வெளிக் கொணரப்பட்டு பின்னர் பழைய கோப்பு வரைபடத்தின் அடிப்படையில் கோயில் சீரமைக்கப்படவில்லையே? புல்டோசர்கள் கொண்டு பழைய புராதன கலைச்சின்ங்கள் நசுங்கிவிடும் அளவிற்கு பெரும் பாரங்கற்களைப் போட்டு நிலத்தை சமன் செய்கிறீகளே என்று கேட்டதற்கு, ”நீயார் என்னை கேட்க? வை போனை!” என்றார். ஆம், நாம் ஒரு பண்டை கலாச்சாரக் காதலன்; காவலன். நம் ஊரில் எந்த பழஞ்சின்னங்கள் இருந்தாலும் அவற்றை பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தரங்கம் பாடி மாசிலாமணிநாதர் கோவிலை தரைமாட்டமாக்கி, புராதனங்களை புதைப்பதில் ஆணையருக்கு என்ன ஆனந்தமோ, தெரியவில்லை!

மிக அருமையான் பதிலை அவர் ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு தந்துள்ளார்! பாரம்பரியத்தைக் காப்பது என் வேலையல்ல, கோயிலை புனரமைப்பது மட்டுமே என் வேலை! பின்னர், முன்பு ‘தனி’ முகாம் நடத்தி உங்கள் மண்டையில் ஏற்றிய பண்டைகால சின்னங்களைக் காப்பாற்ற நடத்திய அந்த முகாம் வெறும் வெளி வேஷமா?நிஜத்தில் கோயில்களை பழமை மாறாமல் காப்பது உங்கள் கடமை இல்லையா? உங்களுக்கு கோயில் புனரமைக்கும் பல ‘காண்ட்ராக்டர்கள்’ பொதுப் பணித்துறை ஆட்களே; அவர்களுக்கு கோயில் கட்டவேண்டிய ஸ்தபதி பதவிக்கும் காத தூரம் அல்லது ஸ்னானப்ராப்தி!

தற்போது மாசிலாமணிநாதர் கோயிலில் புனரமைப்பு செய்வது யார்? முபாரக் கன்ஸ்டக்‌ஷன். அவர்கள் இதற்கு முன் எத்தனை கோயில்கள் கட்டியுள்ளனர்? பழமை மாறாமல் கோயில்களை புனரமைத்தார்களா? இப்படி பல கேள்விகளுக்கு தாங்கள் மக்களாகிய எல்லோருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியைப் பாருங்கள்

சரி, Sand blasting எனப்படும் பழைய கருங்கற்கள் மேல் மணல் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் முறை தடை விதிக்கப்பட்டு, இனி நீர் பாய்ச்சி மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்ற உங்கள் துறையின் ஆணையை மதிக்காமல், தற்போது இரண்டாம் கட்ட வேலையாக குற்றாலம் சித்திரசபை உள்ள கோயிலிலும், தென்காசி குலசேகரநாதர் கோயிலிலும் sand blasting, கதவை மூடிக் கொண்டு நடக்கிறதே! மக்களை உள்ளே விடாததன் மர்மம் என்ன? தடை செய்யப்பட்ட முறையில் கற்களை சுத்தம் செய்வது ஏன்? யாருக்கு நீர் காவல்? sand blasting முறையால் கற்களில் மிக நுண்ணிய அதிர்வுகள் ஏற்பட்டு, கற்கள் சீக்கிரம் வெடித்து விடும் அபாயம் தாங்கள் அறியாததா? அந்த கோயில் அதிகாரியை மக்கள் அணுகி முறையிட்ட போது, ‘எந்த ஆர்டரில் அப்படி போட்டிருக்கிறது? கொண்டுவா அதை” என்று எதிர் கேள்வி கேட்கிறாராம், குற்றாலம் E.O! சபாஷ். தகவல் அறியும் சட்டத்தின்படி அந்த ஆணையை எங்களால் பெற முடியும்; அதற்குள் உங்கள் ‘சுத்தம்’ செய்வது முடிந்துவிடுமே! கோவிலை சுத்தம் செய்கிறீர்களா அல்லது புராதனச் சின்னங்களை ‘சுத்தமாய்’ இல்லாமல் செய்கிறீர்களா? பதில் வேண்டும்.

sand blasting செய்தும் வெள்ளையடித்தும் தொன்மையான பல்லவர் ஓவியங்கள் உத்தரமேரூர் செல்லும் வழியில் உள்ள திருப்புலிவனம் கோயிலில் மற்றும் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள மன்னார்கோவில் சுவர்களில் இருந்த  புராதன நாயக்கர் கால இயற்கை சாறால் வரையப்பட்ட ஓவியங்களும் அழிந்த்து உங்கள் நினைவுக்கு வரவில்லையா? இன்னும் எத்தனை சீரிழப்புகள் சீரமைப்பு என்ற பெயரில் செய்யப்போகின்றீகள்? நீங்கள் பதில் சொல்லவில்லையென்றாலும் காலம் பதில் சொல்லும். புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தற்போது அதிகரித்துள்ளது. என் போன்ற புராதனச் சின்னக் காவலர்கள் என்றும் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்போம். ஆணையர்கள் மாறலாம். நீங்கள் அழித்து விட்டு போன சின்னங்கள் இனி மீண்டு வருமா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இந்த நிரந்தர கலாச்சாரச் சீரிழிவு தொடருமானால் தாங்கள் இந்த துறையில் பணி செய்வது வரலாற்றுச் சின்னங்களின் நன்மைக்கு உகந்ததல்ல. நகருங்கள்..! படம்: மாசிலாமணி நாதர் கோவில் பணிகள். படௌதவி INTACH திரு. ஆசைத்தம்பி.

Leave a comment