Fourthpillar's Blog

உண்மை, நெறிபிறழாமை,நேர்மை போன்ற மை நிரப்பி, எழுதும் சாசனங்கள்!

  • Happenings…

  • Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

    Join 1 other subscriber

புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!

Posted by fourthpress on October 13, 2010

 

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை

 

 

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

 

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்

தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

 

படங்கள்: எஸ்.ஜெயக்குமார்.
இப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:
நன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10
இப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக? மயானத்துக்கா?

 

இன்னுமொரு புராதனச் சின்னம் அழிப்பு

 

இன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி

உடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி.

நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா!
அதே பக்கத்திலேயே கீழே புதுக்கோட்டை மற்றும் மதுரையில் தான் அதிகபட்சமாக குடைவரைக்குகைகள் கண்டெடுக்கப்பட்டதாக, மத்திய தொல்லியல் துறை சொல்கிறது. அதே இடங்களில்தான் அதிகபட்சமாக, குவாரி  ’கல்’ மனசுக் காரர்கள் கல்லுடைக்கிறார்கள்.
மின்னஞ்சல் அனுப்பினால் அதிக பலன் இல்லை என்று நண்பர்கள் தெரிவித்தனர். எனவே புதுக்கோட்டை ஆட்சியருக்கு தந்தி அனுப்புங்கள்.

Posted in புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு | 11 Comments »

புராதனங்களை மதிக்காத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்

Posted by fourthpress on April 25, 2010

29.04.2011 சேர்க்கப்பட்ட செய்தி:

பாருங்கள் இந்த காகிதக் கத்தியை. உரியுங்கள் அறநிலையத்துறையினரின் தோலை.  Sand blastingஐத் தடுப்போம்.

——————————————————————————————–

புராதன சின்னங்களைப் பேணி காப்பதில் தமிழகத்தின் எல்லா கோவில்களிலுள்ள இந்து அறநிளையத்துறை அதிகாரிகளுக்காக, சிறப்பு பயிற்சி முகாம் மக்கள் வரிப்பணத்தில், மூன்று வேளை தடபுடல் விருந்தோடு சென்ற ஆண்டு, தமிழக தொல்லியல் துறை ஆணையாராக உள்ள திரு.ஸ்ரீதர் தலைமையில் அப்போதைய இந்துஅறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர் கலந்து கொள்ளும் வகையில், நடந்தேறியது. ஆனால் தற்போதைய ஆணையர் ஷேம் பத் (எண் கணித அதிர்ஷ்டத்தை நம்பும் அவர் அப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறார் – Shampath என்று- இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியே) எல்லாவற்றையும் தூக்கிக் கிடப்பில் போடும் வகையில், பாரம்பரியச் சின்னங்களை ஒழித்துக்கட்டுவதில் மிக விரைவு சேவை செய்து வருகிறார்! நான் அவரிடம் சமீபத்தில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலின் எச்சங்கள், புராதன சின்னங்கள், கற்சிலைகள், தூண்கள் ஆகியவை வெளிக் கொணரப்பட்டு பின்னர் பழைய கோப்பு வரைபடத்தின் அடிப்படையில் கோயில் சீரமைக்கப்படவில்லையே? புல்டோசர்கள் கொண்டு பழைய புராதன கலைச்சின்ங்கள் நசுங்கிவிடும் அளவிற்கு பெரும் பாரங்கற்களைப் போட்டு நிலத்தை சமன் செய்கிறீகளே என்று கேட்டதற்கு, ”நீயார் என்னை கேட்க? வை போனை!” என்றார். ஆம், நாம் ஒரு பண்டை கலாச்சாரக் காதலன்; காவலன். நம் ஊரில் எந்த பழஞ்சின்னங்கள் இருந்தாலும் அவற்றை பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. தரங்கம் பாடி மாசிலாமணிநாதர் கோவிலை தரைமாட்டமாக்கி, புராதனங்களை புதைப்பதில் ஆணையருக்கு என்ன ஆனந்தமோ, தெரியவில்லை!

மிக அருமையான் பதிலை அவர் ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு தந்துள்ளார்! பாரம்பரியத்தைக் காப்பது என் வேலையல்ல, கோயிலை புனரமைப்பது மட்டுமே என் வேலை! பின்னர், முன்பு ‘தனி’ முகாம் நடத்தி உங்கள் மண்டையில் ஏற்றிய பண்டைகால சின்னங்களைக் காப்பாற்ற நடத்திய அந்த முகாம் வெறும் வெளி வேஷமா?நிஜத்தில் கோயில்களை பழமை மாறாமல் காப்பது உங்கள் கடமை இல்லையா? உங்களுக்கு கோயில் புனரமைக்கும் பல ‘காண்ட்ராக்டர்கள்’ பொதுப் பணித்துறை ஆட்களே; அவர்களுக்கு கோயில் கட்டவேண்டிய ஸ்தபதி பதவிக்கும் காத தூரம் அல்லது ஸ்னானப்ராப்தி!

தற்போது மாசிலாமணிநாதர் கோயிலில் புனரமைப்பு செய்வது யார்? முபாரக் கன்ஸ்டக்‌ஷன். அவர்கள் இதற்கு முன் எத்தனை கோயில்கள் கட்டியுள்ளனர்? பழமை மாறாமல் கோயில்களை புனரமைத்தார்களா? இப்படி பல கேள்விகளுக்கு தாங்கள் மக்களாகிய எல்லோருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியைப் பாருங்கள்

சரி, Sand blasting எனப்படும் பழைய கருங்கற்கள் மேல் மணல் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யும் முறை தடை விதிக்கப்பட்டு, இனி நீர் பாய்ச்சி மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்ற உங்கள் துறையின் ஆணையை மதிக்காமல், தற்போது இரண்டாம் கட்ட வேலையாக குற்றாலம் சித்திரசபை உள்ள கோயிலிலும், தென்காசி குலசேகரநாதர் கோயிலிலும் sand blasting, கதவை மூடிக் கொண்டு நடக்கிறதே! மக்களை உள்ளே விடாததன் மர்மம் என்ன? தடை செய்யப்பட்ட முறையில் கற்களை சுத்தம் செய்வது ஏன்? யாருக்கு நீர் காவல்? sand blasting முறையால் கற்களில் மிக நுண்ணிய அதிர்வுகள் ஏற்பட்டு, கற்கள் சீக்கிரம் வெடித்து விடும் அபாயம் தாங்கள் அறியாததா? அந்த கோயில் அதிகாரியை மக்கள் அணுகி முறையிட்ட போது, ‘எந்த ஆர்டரில் அப்படி போட்டிருக்கிறது? கொண்டுவா அதை” என்று எதிர் கேள்வி கேட்கிறாராம், குற்றாலம் E.O! சபாஷ். தகவல் அறியும் சட்டத்தின்படி அந்த ஆணையை எங்களால் பெற முடியும்; அதற்குள் உங்கள் ‘சுத்தம்’ செய்வது முடிந்துவிடுமே! கோவிலை சுத்தம் செய்கிறீர்களா அல்லது புராதனச் சின்னங்களை ‘சுத்தமாய்’ இல்லாமல் செய்கிறீர்களா? பதில் வேண்டும்.

sand blasting செய்தும் வெள்ளையடித்தும் தொன்மையான பல்லவர் ஓவியங்கள் உத்தரமேரூர் செல்லும் வழியில் உள்ள திருப்புலிவனம் கோயிலில் மற்றும் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள மன்னார்கோவில் சுவர்களில் இருந்த  புராதன நாயக்கர் கால இயற்கை சாறால் வரையப்பட்ட ஓவியங்களும் அழிந்த்து உங்கள் நினைவுக்கு வரவில்லையா? இன்னும் எத்தனை சீரிழப்புகள் சீரமைப்பு என்ற பெயரில் செய்யப்போகின்றீகள்? நீங்கள் பதில் சொல்லவில்லையென்றாலும் காலம் பதில் சொல்லும். புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தற்போது அதிகரித்துள்ளது. என் போன்ற புராதனச் சின்னக் காவலர்கள் என்றும் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்போம். ஆணையர்கள் மாறலாம். நீங்கள் அழித்து விட்டு போன சின்னங்கள் இனி மீண்டு வருமா? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இந்த நிரந்தர கலாச்சாரச் சீரிழிவு தொடருமானால் தாங்கள் இந்த துறையில் பணி செய்வது வரலாற்றுச் சின்னங்களின் நன்மைக்கு உகந்ததல்ல. நகருங்கள்..! படம்: மாசிலாமணி நாதர் கோவில் பணிகள். படௌதவி INTACH திரு. ஆசைத்தம்பி.

Posted in புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு | Tagged: , , , , , , | Leave a Comment »

மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் – சுசி கணேசன்

Posted by fourthpress on May 18, 2009

ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் 1988 மாணவப் பத்திரிகையாளர்களாய் நானும், நண்பன் சு. கணேசன் என்ற இன்றைய பிரபல இயக்குநர் சுசி. கணேசனும் மற்றும் ஒரு மாணவி (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) மதுரை மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். காலத்தில் கோலத்தில், நான் மும்பை, பரோடா நகரங்களில் ப்ளாஸ்டிக் நிபுணனாய், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து, கடந்த 3 ஆண்டுகளாய் என்னால் முடிந்த சமூக சேவை செய்ய எண்ணியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை எங்கள் குழந்தைகளுக்கு எடுத்து இயம்ப என்ணியும் சென்னையில் வசித்து வருகிறேன். புராதனக் கோவில்களை சீரமைக்க ரீச் பவுண்டேஷன் (www.conserveheritage.org) எனது மிக்கியப் பணிக் களம். அதனால் பல கிராம மக்களை சந்தித்து வருகிறேன்.

திரைப்படங்கள், தொ(ல்)லைக் காட்சி இரண்டையும் தவிர்த்து விட்டது எங்கள் குடும்பம். ஆனால், முதன் முதலாய் ஒரு திரைப்படத்தோடு என்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு, சுசி. கணேசனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளக் காரணம் மனித நேயத்தின் ஒரு பரிணாமத்தை நண்பன் சுசி தொட்டதுதான்!

சுசி.கணேசனுடனான தொடர்பை மிகுந்த சிரமங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டேன். சினிமா வட்டத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கஷ்டம். அதுவும் இயக்குநருடன்! துணை இயக்குநர்கள், உதவியாளார்கள் சமுத்திரத்தில் பழைய கல்லூரி நட்பைக் கூறி யார் உள்ளே விடுவார்கள்? அழைப்பிதழ் இல்லாமலேயே, பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பது கிராமங்கள் தத்தெடுப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஏன்?

சினிமா வட்டத்துள் பணமே பிரதானம். அடுத்தவர் துயர் துடைக்கவோ, அல்லது சாமானியனைப் பற்றி எண்ணிப் பார்க்கவோ பிரபலங்களுக்கு நேரம் இருப்பதில்லை.மாணவ நிருபராய் இருந்த கணேசன், கிராமத்திலிருந்து வந்த கணேசன், பி.டெக் படித்த கணேசன், கனவுத் தொழிற்சாலையில் கோலோச்சும் கணேசன்,திரைப்பட வரலாற்றிலேயே (உலக,இந்திய) யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எண்ணி, அதை நனவாக்கியுள்ளார். கந்தசாமி பட பூஜையின் போதே, 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதை அவரது தயாரிப்பாளர் கலைப் புலி தாணு அவர்களின் ஊக்குவிப்பால் அறிவித்தார்.

அது பாடல் வெளியீட்டு விழாவின் போது நிறைவேறியுள்ளது. 17/05/2009 மாலை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், முக்கியமாக பங்கேற்றவர்கள் அந்த 30 கிராமத்தினர்.சொந்த செலவில், பஸ்களில் நிரம்பி வந்தனர். சேர்த்த கூட்டமில்லை, தானாய் சேர்ந்த கூட்டம்!

கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆனந்த பவன், நல்லி அதிபர்கள் உட்பட 20 பேர், அதில் பெயர் சொல்ல விரும்பாத 8 பேர்கள்,அந்த 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். ராமசந்திரா, ஏ.சி.சண்முகம் மற்றும் அகர்வால் கண் – மருத்துவ நிலையங்கள் இந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் தருவதாக அறிவித்துள்ளன.

வந்த விண்ணப்ப மடல்கள் 998. தத்தெடுத்ததோ, 30! எனவே மேலும் பல ஆர்வலர்கள் இந்தப் பணியை ஊக்குவித்து எடுத்துச் செய்ய வேண்டும் என்று எல்லாரும் வேண்டுகோள் விடுத்தனர். சினிமா செட்டிங் போடவே பலகோடிகள் செலவு ஆகும்.

அந்தப் பணத்தை நிரந்தர செலவாக கிராமங்களில் செய்து, அவற்றை மாற்ற முயற்சிக்கும் சுசி.கணேசன், கலைப்புலி தாணு போன்றோரிடம் நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன், மீண்டும் கோருவது இதுதான்: நண்பா, என்னை இப்பணியில் நிரந்தரமாய் இணைத்துக் கொள்! நண்பா, கை கொடுக்கிறேன், தூக்கிவிடு, என் சேவை எண்ணத்தை, அதன் மூலம் பல காலப் பொக்கிஷங்கள் நிறைந்த,சிதிலமடைந்த கோவில்கள் கொண்ட பல கிராமங்களை!

பார்க்க படங்கள்

Posted in சினிமாவில் புதிய செய்தி | Tagged: , , , | Leave a Comment »

சென்னையில் – அருண் ஷோரியின் நெத்தியடி பேச்சு!

Posted by fourthpress on December 4, 2008

அருண் ஷோரிசென்னையில் VIGIL எனும் தொண்டு நிறுவனம், பலகாலமாக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக் கூடிய கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.

சென்ற 1/12/08 சனிக்கிழமை, சென்னை, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியின் அரங்கத்தில், டாக்டர்.கல்யாணராமன் (இவர் சரஸ்வதி நதி மற்றும் ராமர் பாலம் மீட்புப் பணியில் தலையாய பங்கு கொண்ட அறிஞர்) மற்றும் தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில், இந்தியாவைச் சுற்றியுள்ள அபாயச் சூழல் எனும் தலைப்பில் திரு. அருண் ஷோரி, சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

திரு. வைத்தியநாதன் முன்னுரை பேசுகையில், எந்த மதமும் அடுத்தவரை துன்புறுத்துவதை ஆதரிப்பதில்லை. அப்படியிருந்தும், இந்த தீவிரவாத தாக்குதல், சில மதவாத சக்திகளின் பெயரில் நடத்தப் படுவது துரதிருஷ்டமே என்றார். பாகிஸ்தானை மட்டும் கண்காணிக்காமல், சத்தமின்றி, 2 கோடி பங்களாதேசீய அகதிகள் இன்று இந்தியாவில் ஊடுறுவி, வசித்தும் வருகிறார்கள். அசாமில், ஒரு பங்களாதேச அகதி, உள்ளூர் தேர்தலிலும் நின்று, மாநில சட்டசபை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டாராம். அது பெரிய சச்சரவாகி, நீதிமன்றம் தலையிட்டு கண்டுபிடித்தது என்ன என்று தெரியுமா? அவர் இந்திய குடிமகனே இல்லை என்பதை! ஆகா, என்ன அரசியல், என்ன மக்கள்,என்று வியந்தார்.

திரு. அருண் ஷோரி, முன்னாள் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆசிரியர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய மந்திரி ஆக இருந்தவர். நேர்மை, உண்மை, கடமை, நெறிபிறழாமை ஆகிய மைகள் ஊற்றி தனது புலனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள், தலையங்கங்கள், நூல்கள் என எழுதி வருகிறார். போபஃர்ஸ் ஊழல், மகாராஷ்ட்ர அமைச்சர் அந்துலே ஊழல் வழக்குகள் ஆகியவற்றை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியவர் திரு. அருண் ஷோரி.

இத்தலைப்பும், திரு, ஷோரி பேசப்போவதும் முன்பே முடிவான விஷயமாக இருந்தாலும், ஒரு வாரத்திற்கு முன்னே, துரதிருஷ்டவசமாக மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து முடிந்திருந்தது, இது காலக் கொடுமை, விதி!

எனவே, இந்த பேச்சு பலராலும் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. பத்திரிகையாளர் திரு.குருமூர்த்தி, பா.ஜ.க தலைவர் திரு.இல.கணேசன் போன்றோர் முன் வரிசையில் அமர்ந்து இந்த பேச்சை கேட்டனர்.

திரு. அருண் ஷோரி பேசியவற்றில் அதி முக்கியம் வாய்ந்த இந்திய இறையாண்மைக்கு சவால் விடக் கூடிய விஷயங்களை கீழே தொகுத்துத் தந்துள்ளோம்.

ஏ.ஆர். அந்துலே ஊழல் வழக்கை கண்டுபிடித்தவன், போபர்ஃஸ் பேர ஊழல் கண்டுபிடித்தவன், என்றெல்லாம் என்னை மெச்சினார் வைத்தியநாதன். ஆனால், அவர்கள் எல்லாம் இன்று அரியாசனத்தில்! நான் வேலையில்லாதவன்,என்று கலகலப்பாக ஆரம்பித்தார் ஷோரி.

ஆரம்ப கால முதலே, சரித்திரத்தைப் புரட்டிப் பாருங்கள் தெரியும்! கஜனி முகமது, செங்கிஸ்கான், மற்றும் ஏனைய முகமதிய வெறியர்கள் நாட்டை எப்படி எல்லாம் சூரையாடினார்கள் என்று!

நலந்தா மஹாபல்கலைக் கழகத்தைப் பாருங்கள்! 6 மாதமாக எரிந்து கொண்டிருந்த கட்டடங்களில், சுமார் 17,500 கல்வி பயிலும் துறவிகள் செத்து மடிந்தார்கள்! உலகிலேயே மிகப் பெரிய, எல்லா நாட்டினரும் கல்வி கற்க நாடிய நலந்தாவும், காஞ்சிப் பல்கலைக் கழகங்களும் எங்கே? நாட்டின் அடிநாதமான, பாரம்பரியமிக்க தொன்மையான கலாச்சாரத்தையும், கண்களையுமல்லவா அவர்கள் எரித்துவிட்டார்கள்?

ஆனால்,அவர்கள் பொருட்களைக் கொள்ளை கொண்டு போனார்கள். நாட்டின் நம்பிக்கையை அல்ல.

நாம் எப்படியும் எழுந்து, மீண்டு வளர்ந்து விட்டோம்.

இன்றைய நவீன பயங்கரவாதிகளோ, நம் மனங்களையல்லவா மிரள வைத்து விட்டனர்? அதி நவீன பயங்கரவாதிகளை அடக்கும் படையினர் யாருக்காக சேவகம் புரிகின்றனர்? பொது மக்களுக்கா? அல்லவே? அரசியல்வாதிகளின் கைம்பொம்மைகளாக, அரசியல் எதிரிகளை ‘போட்டுத் தள்ளும் குழுக்களாகவும், சீருடை அணிந்த எடுபிடிகளாகவும் அல்லவா ஆக்கிவிட்டனர், நம் தலைவர்கள்? அப்படியும் அந்த மும்பைத் தாக்குதல்களில் வீரதீரக் கடமை புரிந்து உயிர் நீத்த நமது படையினரை எத்தனை பேர் ஞாபகம் வைத்துக் கொண்டுள்ளார்கள்?

பாகிஸ்தானிலேயே அமைதி இன்று இல்லை. சியா,சன்னி முஸ்லீம்கள் அடித்துக் கொள்கின்றனர். பங்களாதேச இஸ்லாமியர்கள், பிற இஸ்லாமியர்கள், ஜனவாத முஸ்லீம்கள், ஆயுதப்படை முஸ்லீம்கள் என்று அவர்களுக்குள்ளேயே பிரிவினை, சண்டை, கொலைத் தாக்குதல்கள்! அதை வளர விட்டு குளிர் காய்கின்றன ஆப்கானிஸ்தானிய தீவிரவாத இயக்கங்கள்; அதன் மூலம் பலரது கொடையும், ஆயுதங்களும், மக்கள் படை சேர்ப்பும் செய்துவருகிறது. ஒன்று தெரியுமா? ஆப்கானிஸ்தான் கொரில்லாக்களே, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக் கோடுகளை அங்கீகரிக்கவே இல்லை. அவர்கள் சொல்வது என்ன தெரியுமா? ‘பேஷாவர் வரையில் எங்கள் எல்லை என்பதுதான்.

எல்.ஒ.டி (LoT) லஷ்கர் ஒ தொய்பா எனும் குண்டு தாக்குதல்களுக்கு காரணம் என கை காட்டப்படும் இயக்கம், லாகூரின் அருகே, 2000 ஏக்கர்கள் கொண்ட பயிற்சிக் கூடத்தை நிறுவியுள்ளது! சுமார் 20 முதல் 30 லட்சம் மக்கள் அவர்களது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து ஆதரிக்கிறார்கள்! அவர்களது ‘ஜிஹாத் மற்றும் ஷிஹாத் என்ற கொள்கை என்ன தெரியுமா? பிறந்த குழந்தை முதலே, மழலைப் பள்ளிக் கூடங்கள், தொடக்கப் பள்ளிகள், மேற்படிப்பு, கல்லூரி என எல்லா மட்டத்திலும், தனிப்பட்ட மதக் கோட்பாடுகளை வைத்தே பாடங்கள் அமைக்கப் படுகின்றன. ‘இந்தியா எனும் எதிரி என்றே புத்தகங்களில் குறிப்பிடப் படுகின்றன!

பிறரைக் கொலை செய்வது போதிக்க வில்லை என்று வைத்தியநாதன் மழுப்புகிறார்! யாரை சந்தோஷப்படுத்தி ‘நடுநிலமையாளர் என்ற பெயர் எடுக்கப் பார்க்கிறார்? இந்த பத்திரிகைக் காரர்கள் எல்லாருமாய் சேர்ந்து இல்லாததையெல்லாம் எழுதி, எழுதியே, தீவிரமான விஷயத்தை ஒன்றுமில்லாதது போல் எழுதி விடுகிறார்கள்! நிஜத்தைச் சொல்ல என்ன தயக்கம்? அவர்களது கோட்பாடுகளிலேயே என்ன வருகிறாது தெரியுமா? எதிரியை கொல். ஒரேடியாக அல்ல. 1000 வெட்டுக்களால் மரணம்! அப்படியென்றால்? கழுத்தை விட்டியோ, அல்லது ஒரே குண்டால் சுட்டு வீழ்த்தியோ எதிரி இறந்துவிட்டால், அவனுக்கு மரணத்தின் தாக்கம் தெரியாது! ஆனால், 1000 இடங்களில் வெட்டி, அவன் ரத்தம் சிந்துவது கூட தெரியாமல், கொன்றால், திடீரென அவன் அணு அணுவாக சித்திரவதைக்கு ஆளாகி, தான் மீட்க முடியாதபடி வெட்டப் பட்டிருக்கிறோம், என்பதை அறியுமும் அவன் ஆவி போய்விடும்! என்ன கொடூரமான சிந்தனை! அதைத்தானய்யா இந்திய அன்னைக்கு செய்கிறார்கள். ஆயிரம் வெட்டுக்கள், ஆண்டுன்றுக்கு 2-3 குண்டு வெடிப்புகள், பொது மக்கள் சாவு, பாராளுமன்றத்தில் குண்டு, வாகனங்களில் குண்டு, சந்தை நடுவே குண்டு, ஓடும் ரயிலில் கொலை, நம் வருமானத்தின் நரம்பு மண்டலமான பங்குச் சந்தைக் கட்டிடம் மீது குண்டு, என்று அடுத்தடுத்து 1000 வெட்டுக்களால், நம் அன்னையை அவன் கொன்று கொண்டு வருகிறான். அவனுக்கு இருக்கும் தீவிரச் செயல்பாடு, நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நம் தலைவர்களுக்கு இல்லையே?

(தாவூத் இப்ராஹிம் பற்றியும் பேச்சு வந்தது. கராச்சியின் பிரதான சாலையில், அமைச்சர்களின் வீடுகளின் வரிசையில், அவனது மாளிகை உள்ளது! கிரிகெட் வீரர் ஜாவேத் மியாந்தத்தின் சம்பந்தி ஆகியுள்ளான், தாவூத்! என்பது உலகத்துக்கே தெரியும்; பாவம்,நமது அரசியல் ஆட்சியாளர்காலுக்குத்தான் தெரியவில்லை! கட்டுரையாளர்)

இது மரத்துக்கு இரும்பு வேலி போடுவது போல் என்று பாதுகாப்பு அமைச்சர் சொன்னார். ஆனால், அண்டைய நாடுகளிலிருந்து அகதிகள் என்ற பெயரில் கோடானு கோடி அன்னியரை உள்ளே விட்டு, மரத்தின் தண்டு கரையான்களால் அரிக்கப்பட்டு, வெறும் கூடு போல, இந்த மரம் நிற்கிறதே, அதற்கு துருபிடித்த இரும்பு வேலி எதற்கு?

சரி, அலட்சியப் போக்கு மிக்க நம் உள்நாட்டுத் தலைவர்களின் விஷயங்களுக்கு வருவோம்:

§ 19 மே 2006 அன்றே சியாச்சன் பனித் திரை நிலத்தினை நாம் இயலாமையால் பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்திருபோம். ப்ரணாப் முகர்ஜி அவர்களின் தீவிர முயற்சியால்தான் இது தடை பட்டது!

திசம்பர் 2006 எல்லா மாநில காவலதிகாரிகள் மாநாட்டில்: ‘ எல்லை ஊடுறுவி பயங்கரவாதிகள் வர வாய்ப்புகளிருப்பதாக, நம்பகத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. தயாராக இருங்கள் — (1)

மார்ச் 2007 பாதுகாப்புத் துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்தது; கடல் மார்கமாக எதிரிகள் வரலாமென நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. தயாராக இருங்கள் — (2)

அதற்கு மாண்புமிகு உள்துரை அமைச்சர் பதில்: ஆமாம், உண்மை நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. தயாராக இருங்கள் — (3)

9ம் தேதி மே, 2007 பாதுகாப்புத் துறை மந்திரி: கடல் வழியே எதிரிகள் வருகிறார்களா?

உள்துறை மந்திரி மீண்டும் பதில்: ஆமாம், கடல் வழியே தாக்கலாம். உண்மை. நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. தயாராக இருங்கள் — (4)

உடனே பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் புதிதாக 14 முதல் 15 நாடுகளிலிருந்து இளைஞர்களை சேர்த்து, புதிய கலல் வழித் தீவிரவாதப் பயிற்சிப்பட்டறையை பாகிஸ்தான் நிறுவியுள்ளது என்ற தகவல் நம்பகமான இடத்திலிருந்து வந்திருக்கிறது. ஜாக்கிரதையாய் இருங்கள் — (5)

11ம் தேதி மார்ச், 2008 பாதுகாப்பு மந்திரி ஏ.கே. அந்தோணி தில்லியில் நடந்த பாதுகாப்பு குறித்து நடந்த மாநாட்டில் கூறியது: நமது கடற்படையில், ஆட்கள் குறைவு, நவீன ஆயுதங்கள் குறைவு, படகுகள் குறைவு, வசதிகள் மேம்படுத்தப்படவில்லை,என்று குறை கூறி, அரசிடம் சலுகைகளை எதிர் நோக்கி கை நீட்டினார்.

13ம் தேதி,மார்ச் 2008 பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது: கடல் வழியே தீவிரவாதம் எதிர்க்கப்படவேண்டும். தவரவிட்டால், பாதிப்பு நமக்குத்தான்.

22ண்ட் நவம்பர் 2008 (மீண்டும்) காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில்: கடல் வழியே ஆபத்து சூழ்ந்துள்ளன. அவை தடுக்கப்படவேண்டும். தயாராக இருங்கள் உள்துறை மந்திரி!

இப்படி சொன்னதையே மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தி யாரை நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள்? நடவடிக்கை மந்திரியாகிய அவர்களேயல்லவா எடுக்க வேண்டும்? முடியாத துறையை மடியில்கட்டிக் கொண்டு, ஆயிரம் எச்சரிக்கை கிடைத்தும், பொது மக்களை பயங்கரவாதத்திற்கு இறையாக்கிவிட்டு, கை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்களே, இவர்களால்லவோ உடனடியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்?

2004 ஆம் ஆண்டே, திரு. மாதவ் கோட்போலே எனும் வல்லுநரை அரசு நியமித்து அதி நவீன பறக்கும் படை அமைக்கும் பணி குறித்த ஆலோசனைக் கமிட்டி அமைக்க செயல்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால்,புதிய ஆட்சியாளர்கள் வந்ததும் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள்!

ஐ.எஸ்.ஐ. (ISI) எனும் பாக் தீவிரவாத இயக்கம், இந்திய கடற்கரைகளில் கள்ளத் தோணிகள் மூலம் ஹவாலா பணம், போதைப் பொருள், ஆயுதங்கள் ஆகிய கடத்தல் பொருட்கள் கொண்டு வரும் இந்திய தேசத் துரோகிகள், அயோக்கியர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களுக்கு நவீன வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் மூலமே தங்களுக்கு இந்தியாவுக்குள் கொண்டு வரவேண்டிய ஆயுதங்கள்,குண்டுகள், ஆட்கள் போன்றவற்றை தடையின்றி கொண்டுவரச் செய்துள்ளனர்; செய்து வருகிறார்கள்!

லட்சத்தீவை இந்திய கட்டுப்பாடுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று எத்தனையோ முறையீடுகள் இருந்தும்,அரசு ஏனோ மெத்தனம் காட்டி வருகிறது! 36 தீவுகள் கொண்டது லட்சத்தீவு! கர்வார்த்தி எனும் ஒரே ஒரு பெரிய தீவுக்கு மட்டும்,

1- தலைமை அதிகாரி,

1- கான்ஸ்டபிள்,

1- இன்ஸ்பெக்டர்,

1- எஸ். ஐ.

ஏனைய தீவுகள் ஆட்கள் அற்றது! அந்த 35 தீவுகளுக்கும் சேர்ந்து ஒரே ஒரு தலைமைக் கான்ஸ்டபிள்! அவரும் அங்கு தனியே செல்வதில்லை! கர்வார்த்தி தீவிலேயே இருப்பார்!

இந்த 35 தீவுகள்தான் பயங்கரவாதிகளின் கிடங்கு, பதுங்கு மையம் மற்றும் பயிற்சி மையம் என்று எத்தனியே முறை இண்டர்போல் உட்பட எல்லா பன்னாட்டு உளவுத்துறையும் சொல்லி வந்தும் கூட அங்கே எல்லாம் ஒரு திடீர் அதிரடி கடற்படை சோதனை செய்து, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேச, பயங்கரவாதிகள் மற்றும் அட்டகாசங்கள் செய்யும் அங்கு பதுங்கும் கடற்கொள்ளைக் காரர்களை பிடித்தால், அந்த பிரதேசமே மிக பாதுகாப்பு மிக்கதாக மாறிவிடும். ஏன் இந்திய அரசு இந்த வாய்ப்பைத் தவறவிட்டு வேடிக்கை பார்க்கிறது? இதை ஏன் கண்டு கொள்வதில்லை? லட்சத்தீவுகளி ஏன் தன் பிட்க்குள் கொண்டு வரமாட்டேன் என்கிறது?

சமீபத்தில் திரு. ஷோரி, பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, லட்சத்திவுகளில் படைபலம் அதேதானா இல்லை நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதா,என்று வினவியதற்கு, “ஓ,மாறிவிட்டதே, அந்த தலைமை அதிகாரி, மற்றும் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, டைரக்டர் ஜெனரல் அந்தஸ்து பெற்றுள்ளனர், “என்று பதில் வந்ததாம்! தலை எழுத்து!

பாகிஸ்தானிலிருந்து மட்டுமில்லை.பங்களாதேசத்தின் முஸ்லீம் பயங்கரவாதிகளை பணத்தாசையால் மடக்கி, அவர்கள் மூலமாக, தரை வழியே, கடல் வழியே இந்தியாவுக்குள் சைனாவிலிருந்து ஆயுதங்கள் கொண்டு வருகிறார்கள்!

சீனா என்ன யோக்கியமா? அவர்களுக்கு எல்லா விதத்திலும்,போட்டியாக விளங்கக் கூடிய நாடு என்றால் அது இந்தியாதான். திபத் இந்துக்கள், தலாய் லாமாவுக்கு இந்தியா தரும் பாதுகாப்பு போன்றவையும், அவர்களுக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது. எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால், அவர்கள் பங்களாதேசத்து கடற்கறை நகரங்களை நவீனப்படுத்தி தங்கள் கடற்படையை அங்கு நிறுவி உள்ளனர்! பாகிஸ்தான தீவிரவாதத்திற்கு ஆதரவு தந்துள்ளனர். ஆசியன் மாநாட்டில் சீன மந்திரி குறிப்பிட்டது என்ன தெரியுமா? பாகிஸ்தான் – சீன உறவு பல்லும், உதடும் போல்!என்று!

மேலும், திபத்தின் நிலங்கள் முழுவதும் தரைப்படை களமாக மாற்றிவிட்டது சீனா. 2005 ஆம் ஆண்டு இந்திய அரசோடு, நடுநிலமை, எல்லைக் கோட்டு மீறா உடன்பாடு என்று 10 கோட்பாடுகள் கொண்ட ஒப்பந்தத்தை சீனா போட்டது. ஆனால்,ஓரிரு மாதங்களிலேயே, எல்லா கோட்பாடுகளையும் மீறியது சீனா!

இந்திய திபெத்திய – சீன எல்லையில் இன்றுவரை சீன போருக்குப் பிறகும், சீனப் படைகள் சுமார் 160 முறை சண்டை நடத்தியுள்ளன! அடாவடியாக இந்திய எல்லையுள் ஏறத்தாழ 40 கிலோமீட்டர்கள் வரை எல்லை தாண்டி தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தி உள்ளனர் சீனர்கள்!

(சமீபத்திய மும்பை குண்டு விடிப்பில் கிடைத்த துப்பாக்கிகள்,கைக் குண்டுகள் சீனத் தயாரிப்புகள் என்பதை நாம் இங்கு குறிப்பிட வேண்டும் கட்டுரை ஆசிரியர்)

சரி,இதற்கு என்னதான் தீர்வு?

இந்தியன் என்ற உணர்வுகமிக்க, தேசப்பற்றுள்ள தலைவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள். கட்சி பேதம், பண பலம் காணாமல், தேசியமே கொள்கையாய் கொள்ளும் தலைவர்களை இனம் கண்டு அவர்களை ஆதரியுங்கள், என்றார்.

கேள்வி நேரத்தின் போது ஒருவர், ஐயா,மும்பையில் குண்டு வெடித்தது, இரண்டு நாட்களாக தினமணி ஆசிரியர் குறிப்பிட்டது போல், சராசரி வண்டிகள்,எங்கள் அலுவலத்துக்குள் என எல்லா இடங்களிலும், போலீசார், ஆண்களை தீவிர சோதனை செய்தே உள்ளே விடுகின்றனர். ஆனால்,பெண்களை விட்டு விடுகின்றனர், இதோ ஒரு வாரம் ஆகிவிட்டது,. அந்த சோதனைகளும் நின்று விட்டன!என்ன முறை இது? என்று வினவினார். அதற்கு ஷோரி, “சரிதான். சோதனை என்றால் ஆண்,பெண் பேதம் கூடாது. அதேபோல், விமான தளம், மற்றும் கூட்டம் மிக்க பொது இடங்களில், டிடெக்டர் கொண்டு போலீசாரோ, அதிரடி படையினரோ சோதனை செய்தால், அவர்களோடு ஒத்துழையுங்கள். ‘இது நம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை. எவ்வளவு நேரமானாலும் சோதனையிடுங்கள், நாங்கள் பொறுமை இழக்கமாட்டோம், “ என்று அவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள்.அப்படி இல்லாது,யாரடா இது, வேலையெத்த வேலை என்று ஏளனம் செய்யாதீர்கள். முக்கியமாக அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள், சோதனை இல்லாமலேயே, ‘சிறப்பு வழியில் நேராக விமானம் ஏறச் செல்கின்றனர். இவை நிறுத்தப் பட வேண்டும்.என்று பதிலளித்தார்.

கேள்வி கேட்ட நபர், ராஜீவ் காந்தியைக் கொன்றது ஒரு பெண் மனித வெடிகுண்டு பயங்கரவாதிதான், ஞாபகமிருக்கட்டும், “ என்பதை பலமாக தலையாட்டி ஒப்புக் கொண்டார்.

இன்னொருவர், “சிதம்பரத்தை ஏன் உள்துறை மந்திரியாக்கினார்கள்? மன்மோகன் சிங் அவர்களே அந்த முக்கிய பதவியையும் கவனிக்கலாமே?,என்றதற்கு, ஷோரி, தனக்கே உரிய நகைச் சுவை பாணியில்,ஐயா, அங்கே கிடைப்பது., தகுதிக்கு தக்க மந்திரி பதவி அல்ல. நிதி அமைச்சகத்தில் சிதம்பரம் மேலும் தொடர்வது அவர்கள் தலைமைக்கு பிடிக்கவில்லை. சிவராஜ் பாட்டீலையும் கழற்றியாக வேண்டும், சிதம்பரத்தையும் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என்றுதான் அவர்கள் அப்படி செய்தார்களோ என்னமோ? “ என்றதும், அரங்கம் அதிரும் சிரிப்பலையால் நிறைந்தது!

Posted in அரசியல் தோலுரிப்பு | Tagged: , , , | Leave a Comment »